பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை(மார்ச் 4) முதல் மார்ச் 25-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,334 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிறமாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.

மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in