Published : 03 Mar 2024 05:37 AM
Last Updated : 03 Mar 2024 05:37 AM

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணிக்கான தேர்வு திடீர் ரத்து

கூடங்குளம் அணுமின் நிலையப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தும் விவகாரம் தொடர்பாக, ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியோர் மற்றும் பொதுமக்கள்.

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று நடைபெறஇருந்த தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 1999-ம்ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படிதான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். உள்ளூர் மக்களைப் புறக்கணித்து, கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்கள், படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டுமே ‘சி’ பிரிவு பணியிடங்களை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி, அணுசக்தித் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர்மு.அப்பாவு கடிதம் அனுப்பிஇருந்தார்.

இதற்கிடையே, கூடங்குளத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்: இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அர்பித் ஜெயின், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது கூட்டத்தின்நிறைவில், இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுதற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ‘சி’ பிரிவில் தேர்வு இல்லாமல் பணி வழங்கிய பின்பு, ‘பி’ பிரிவு பணிகளுக்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x