Published : 03 Mar 2024 04:02 AM
Last Updated : 03 Mar 2024 04:02 AM
சென்னை: கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்த தடை கோரி மனித நேய ஜனநாயக கட்சி தொடர்ந்த வழக்கில் தமிமுன் அன்சாரி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் டி.கே.பஷீர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சி கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்: எங்கள் கட்சியில் எம்.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கட்சியில் உரிய முறையில் பங்களிப்பை வழங்காததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நேரத்தில் கரோனா பேரிடர் ஏற்பட்டதால், 2022-ம் ஆண்டு டிச.10-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நான் தலைவராகவும், துணை தலைவராக சையத் மகபூ சுபானியும், பொதுச் செயலாளராக எஸ்.எஸ்.ஹாருண் ரசீத்தும், பொருளாளராக என்.ஏ.திமியாவும் தேர்வு செய்யப்பட்டோம்.
கட்சியில் உறுப்பினராக இல்லாத தமிமுன் அன்சாரி போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து, தன்னை மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவராக தெரிவித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சட்ட விரோதமாக கட்சியின் பெயர், லெட்டர் பேடு, கொடி ஆகியவற்றையும் பயன்படுத்தி வருகிறார்.
எனவே, சட்ட விரோதமாக எங்கள் கட்சியின் பெயர், கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த தமிமுன் அன்சாரி மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு தடை விதிக்க வேண்டும். அவர் கடந்த 2022-ம் ஆண்டு டிச.24-ம் தேதி கூட்டிய பொதுக் குழுவை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். மனித நேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் தலையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல் முருகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிமுன் அன்சாரி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT