

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை எனத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற அமர்வு, ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க உத்தரவிட்டது.
சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியரும் நோட்டீஸ் அனுப்பினர்.
இதை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வரும் கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்த பிறகே காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், பூசாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் அமர்வு தங்கள் உத்தரவில் “புராணங்களில் சொல்லப்பட்ட பிரகலாதன் கதையில் கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கடவுள் கேட்பதில்லை. உண்மையான பக்தியுள்ள எந்த பக்தனும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கோவில் அமைக்க மாட்டர்கள்,
ஏனென்றால் அது இடிக்கப்படும் என அவர்களுக்கு தெரியும். தெய்வங்களின் சிலை வைத்து கோவில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோவிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.