Published : 25 Feb 2018 06:07 PM
Last Updated : 25 Feb 2018 06:07 PM

பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ

பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல் கிடைத்ததை அடுத்து தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.

அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர்.

மருத்துவ ஆவணங்கள், முறையான சான்றிதழ்கள் இல்லாமல், இறந்த உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டு வைத்து இருப்பதைப் பார்த்து எச்சரித்துள்ளனர். 2017 செப்டம்பருக்குப் பின்னால் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வருவதை, அப்பகுதி சமூகச் செயல்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவித்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி.20 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.

இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர்.

பிரச்சினையைத் திசைதிருப்ப, வழக்கமாகப் பின்பற்றும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலென்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரைக் காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர்.

இதை அறிந்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவரும், சிறந்த சமூக செயல்பாட்டாளருமான ஜி.கருணாகரன், சாலவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளருமான தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்களது அலைபேசிகளைப் பறித்துள்ளார்; யாருக்கும் தகவல் தெரிவிக்க விடாமல், நடுநிசி வேளையில் மூவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மனிதாபிமானமற்ற முறையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 148, 341, 294(பி), 506(1), டி.பி.பி.3(1), ஆகிய பிரிவுகளில் பொய் வழக்குப் போட்டு, கடந்த 21-ம் தேதி அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவர்கள் மீது வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்து இருப்பது உரிமை மீறல் ஆகும். பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x