Published : 23 Feb 2018 07:20 AM
Last Updated : 23 Feb 2018 07:20 AM

மதுரை மண்ணில் அரசியலுக்கு அச்சாரமிட்டார்: முதல் நாள் அரசியலில் கமல் செயல்பாடு எப்படி?

கலாம் வீட்டில் ஆசி, கமலின் செயல்பாடு, பேச்சு, திட்டமிட்ட கூட்ட ஏற்பாடுகள், கட்சி தொடக்கம், கொள்கை அறிவிப்புகள் பல்வேறு தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளபோதிலும் ஒருசில குறைகள் இல்லாமல் இல்லை.

மதுரையில் நேற்று முன்தினம் நடந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதற்காக கமல் மேற்கொண்ட பயணம், திட்டமிடல், அவரது கொள்கை அறிவிப்புகள், கட்சி பெயர், கொடி என ஒவ்வொன்றும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மக்களிடம் வரவேற்பு

அரசியல் பயணத்துக்காக ராமேசுவரத்தில் உள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தை தேர்வு செய்தது, ராமநாதபுரம் மற்றும் தான் பிறந்த ஊரான பரமக்குடி மக்களிடம் ஆசி பெறும் வகையில் கூட்டத்தினரிடம் பேசியது என பல்வேறு தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கட்சி பெயர், கொடி அறிமுகத்துக்கு மதுரையை தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தமானது என்பதை நேற்று முன்தினம் நடந்த பல நிகழ்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. எம்ஜிஆர், தனது அரசியலை மதுரையை மையமாக வைத்தே நடத்தினார். விஜயகாந்த் கட்சி தொடங்கியதும் இங்குதான். எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்ததும் மதுரை மாநாட்டில்தான். சூடான அரசியலை முன்னெடுக்க மதுரைதான் சரியான களம் என்பதை கமல் பொதுக்கூட்டத்தில் காண முடிந்தது.

மாலை 6 மணி வரை சுமாரான கூட்டமே மைதானத்தில் திரண்டிருந்த நிலையில், கமல் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். அதேநேரம், கமல் மைதானத்துக்கு வந்து நிகழ்ச்சி 7.25 மணிக்கு தொடங்கியபோது, கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கிருந்துதான் திடீரென இவ்வளவு பேர் வந்தனரோ என ரசிகர்களே திகைத்துப்போனார்கள்.

இவ்வாறு பாசத்தைக் கொட்டி திக்குமுக்காடச் செய்வதே மதுரையின் தனித்துவம்.

கடவுள் வாழ்த்து

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை அழைத்து வந்தது, கேரள முதல்வர் பினராய் விஜயனின் வாழ்த்து செய்தியை காணொலியாக ஒளிபரப்பியது, விவசாயப் பிரதிநிதிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மேடை ஏற்றியது, கடவுள் வாழ்த்து, தேசிய கீதத்துடன் பொதுக்கூட்டத்தை நடத்தியது எனப் பல நிகழ்வுகள் கமல் மீதான மதிப்பை உயர்த்தியது.

நெரிசல், தள்ளுமுள்ளு, கூச்சல், குழப்பம் ஏதுமின்றி பொதுக்கூட்டம் நடந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. வாகன ஊர்வலம், ஒலிபெருக்கி கூச்சல், போக்குவரத்து நெரிசல் எனப் பொதுமக்களுக்கு இடையூறான எந்த விஷயத்தையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதில் கமல் மிக உறுதியாக இருந்தார்.

சால்வை அணிவிப்பது, காலில் விழுவதை தவிர்ப்பது என்ற அறிவிப்பு, மேடையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தது, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல் தான் கட்சி தொடங்கியதன் நோக்கம், இதற்காக மக்கள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு, வாக்களிக்க பணம், ஊழல் ஒழிப்பில் மக்கள் பக்கம் உள்ள தவறை தைரியத்துடன் சுட்டிக்காட்டியது என பல விஷயங்கள் நடுநிலை மனம் கொண்டோரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறைகளை களைவது முக்கியம்

கமலின் கட்சி அறிவிப்பு வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், பல்வேறு குறைகளையும் காண முடிந்தது. மீனவர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை 5 நிமிடங்களில் முடித்தது முதல் பிரச்சினையை கிளப்பியது. இதன் தாக்கத்தை உணர்ந்த கமல், சிறிது நேரத்திலேயே மீனவப் பிரதிநிதிகளை அழைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்.

மதுரைக்கு செல்லும் வழி நெடுகிலும் திரளான மக்கள் கூடியிருந்தனர். கமலை பார்க்க அதிக ஆர்வம் காட்டினர்.

கட்சியின் பெயரும் எளிமை யாக இருந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கட்சி, கழகம் என்பதுபோன்ற வார்த்தைகளையே கேட்டு பழகிப்போன மக்களுக்கு மய்யம் என்ற வார்த்தை புதிதாக தோன்றுகிறது. தன்னை நம்பி வருபவர்கள் வரட்டும் என கமல் இருந்தாலும், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அறிவித்து, திட்டமிட்டு கூட்டத்தை நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

சினிமாவில் இருந்தபோதே அரசியல் பயணத்தை தொடங்கிய எம்ஜிஆரே தனிக்கட்சி தொடங்கியபோது சில அனுபவசாலிகளைத் தன்னுடன் வைத்துக்கொண்டார். அதுவே அவர் பொதுமக்களிடம் நெருங்கி செல்ல பெரிதும் உதவியது. அதுபோல கமலின் அரசியல் பயணத்துக்கும் சில அனுபவசாலிகள் தேவைப்படலாம். இது காலத்தின் கட்டாயமாகும். இதை போகப் போக கமலே உணரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x