

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
> இந்திய அளவில் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடத்தும் நடைமுறையைக் கைவிட்டு இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நடத்திட வேண்டுமெனவும்; அதற்கேற்ப தேர்தலுக்கான கால அட்டவணையை அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த உயர்நிலைக் குழு கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், வாக்குப் பதிவு நடப்பதற்கும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்குமிடையிலான கால இடைவெளி ஒரு மாதத்திற்கும் மேலாக இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும்; அதற்கேற்ப வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
> மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு 100% ஒப்புகை சீட்டு இயந்திரங்களை இணைக்க வேண்டுமெனவும்; அந்த ஒப்புகை சீட்டுகளை மட்டுமே எண்ணித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டுமெனவும் மீண்டும் தேர்தல் ஆணையத்தை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
> ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த சாந்தன், ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் தமிழக அரசின் பெரும் முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலை பெற்றனர். ஆனாலும், அவர்கள் தாம் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே உடல்நலக் குறைவால் சாந்தன் அண்மையில் மறைவெய்தியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலிவுற்று உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பாகும். இந்நிலையில், தற்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் கோரிக்கைகளையேற்று அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்வதற்கு உரிய அனுமதியை வழங்குமாறு இந்திய அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.