

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளுக்கு ரூ.2.93 கோடிமதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை நேற்று செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் பிப். 18-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராமஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 526ஊராட்சிகளின் தலைவர், செயலர், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளிடம், கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான 33 உபகரணங்கள் கொண்ட, ரூ.2 கோடியே 92 லட்சத்து, 85 ஆயிரத்து 760 மதிப்பிலான 672 விளையாட்டு உபகரணங்களின் தொகுப்புகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச பளு தூக்கும் வீரர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், ஸ்ரீ கார்த்திக்சபரிராஜ் ஆகியோரை கவுரவித்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர் ஆர். காந்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சுகபுத்ரா, திருவள்ளூர் எம்.பி. ஜெயகுமார், எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், சா.மு.நாசர், கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.