Published : 02 Mar 2024 06:12 AM
Last Updated : 02 Mar 2024 06:12 AM

ஆவண தயாரிப்பாளர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் வசதி: பதிவுத் துறையில் தொடக்கம்

சென்னை: வங்கியைப்போல், பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவர் பெயர், டோக்கன் எண் ஆகியவற்றை அறிவிக்கும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின் பெயர் மற்றும் டோக்கன் எண் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட காட்சிக் கருவி மூலம் காண்பித்து அறிவிக்கும் வசதி ரூ.3.64 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை, சென்னை அண்ணா சாலையில் உள்ள தியாகராய நகர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

ஆவணப் பதிவில் வரிசைக்கிரமத்தை விடுதலின்றியும் வெளிப்படையாகவும் உறுதி செய்வதற்காக டோக்கன் எண்ணோடு ஒவ்வொரு பதிவுடனும் தொடர்புடைய நபரை பெயர்சொல்லி அழைக்கும் வகையில் இந்தவசதியானது அனைத்து சார்-பதிவாளர்அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் டோக்கன் எண் எப்போது வரும் என்பதை பதைபதைப்புடன் எதிர்நோக்கி காத்திராமல், அழைக்கப்பட்டவுடன் அலுவலகத்துக்குள் பதட்டமின்றி சென்று, எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வருவாய் அதிகரிப்பு: பதிவுத் துறையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளின் விளைவாக கடந்த பிப்ரவரி வரை, இந்த நிதியாண்டில் ரூ.16,653.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டில் பிப்ரவரி 2023 வரை அடைந்த வருவாயைவிட ரூ.1,121.60 கோடி அதிகமாகும். இந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.1,812,70 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி வருவாயைவிட ரூ.218.74 கோடி அதிகமாகும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x