

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நூல்கள் விற்பனையை அதிகரிக்க 100 புத்தக மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நலன்காக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 37,588 அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 24,035 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 50 வயதுக்கு மேற்பட்ட 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு மட்டும் தற்போது முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி அரசின் ‘கோல்டு’ திட்டத்தின் கீழ் 50 வயதுக்கு மேலான ஆசிரியர்கள் 16 விதமானபரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும். மொத்தம் உள்ள 1 லட்சத்து 6,985 பேரில் ஆண்டுதோறும் 35,600 ஆசிரியர்கள் வீதம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த பரிசோதனை முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனையை ஆசிரியர்கள் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான கால அட்டவணை மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு பரிசோதனை நாளில் ஆசிரியர்களுக்கு விடுப்பு தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
100 புத்தக மையங்கள்: இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின் பாதம்ஸ் புத்தக விற்பனை மையத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நூல்களின் விற்பனைப் பிரிவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். அப்போது பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்ட துறை உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறும்போது, ``பாடநூல் கழகத்தின் சார்பில் 900-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் 100 புத்தக மையங்களை உருவாக்கி விற்பனையை அதிகரிக்கச் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், அறிவியல் ஆய்வு சார்ந்த புத்தகங்கள் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள் ளது'' என்றார்.
தொடர்ந்து இடைநிலை ஆசி ரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேட்டபோது, ``நல்ல நாளில் ஏன் இதைப் பேச வேண்டும்'' என்று பதில் கூறிவிட்டுச் சென்றார்.