Published : 02 Mar 2024 06:20 AM
Last Updated : 02 Mar 2024 06:20 AM

மானிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி நடந்த சென்னை பல்கலை. பேராசிரியர்கள், அலுவலர்கள் தொடர் போராட்டம் வாபஸ்

நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும், மார்ச் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.படம்: ம.பிரபு

சென்னை: சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம் முன்பு நேற்று காலை தொடங்கியது. இதில் பல்கலை. பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பல்கலைக்கழக அலுவலர் சங்க தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்று கூறி அதன் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை கடந்த 20 நாட்களாக முடக்கி வைத்துள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகத் தில் பணியாற்றும் சுமார் 600 பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக் கும் மார்ச் மாதம் சம்பள போட இயலவில்லை.

சென்னை பல்கலைக்கழகத் துக்கு மானியமாக ஆண்டுக்கு ரூ.10 கோடியும், கூடுதல் மானியமாக ஆண்டுக்கு ரூ.70 கோடியும் தமிழக அரசு தர வேண்டும். கடந்த 2017 முதல் இந்த மானியத் தொகையை தமிழக அரசின் உயர்கல்வித் துறை வழங்கவில்லை. கணக்கு தணிக்கை பிரச்சினை காரணமாக மானியத் தொகையை தரவில்லை என்று அரசு கூறுகிறது.

தணிக்கை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சொல்லியுள்ளோம். எனவே, தமிழக அரசு மானிய நிலுவைத் தொகையை உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

இந்நிலையில், பேராசிரியர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் கூறும்போது, “வருமானவரித் துறையின் வங்கிக் கணக்கு முடக்க பிரச்சினைக்கு தீர்வு காண பல்கலைக்கழக பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் (நேற்று) மதியம் 2 மணிக்குள் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். சென்னை பல்கலைக்கழகம் உள்பட 13 அரசு பல்கலைக்கழகங்களில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய நிதி கணக்கு தணிக்கை இயக்குநர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் முதல்வருடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக சென்னை பல்கலைக்கழக அலுவலர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம். தமிழக அரசிடமிருந்து மானிய நிலுவைத்தொகையை பெற வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. அப்போதுதான் பல்கலை. நிர்வாகத்தை தொடர்ந்து நடத்த முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x