

புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் தானே எழுதிப் பாடிய தமிழ் ‘ராப்’ பாடல் ஆல்பம் வெளியிட்டுள்ளார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு இதழியல் படிப்பவர் பிரகாஷ். தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் வசிக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ‘கனவுகள்’ என்ற பெயரிலான தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது 5 தமிழ் ‘ராப்’ பாடல்களைக் கொண்டது. இந்த ஆல்பத்தை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனா புதன்கிழமை வெளியிட்டார்.
நட்பு, காதல், தமிழ்மொழி பற்றி பாடும் இந்த ‘ராப்’ ஆல்பத்தில் தவில், நாதஸ்வரம், கஞ்சீரா, மிருதங்கம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகளை கொண்டு பிரசன்னா சிவராமன் இசையமைத்துள்ளார்.
விழாவில் பிரகாஷ் கூறியதாவது:
நான் சொந்தமாக ‘ராப்’ பாடல்கள் எழுதவேண்டும் என்று இசையமைப்பாளர் ரஹைனா 5 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். என்னை ஊக்குவித்து அவர் சொன்ன வார்த்தைகள்தான் இந்த ஆல்பம் வெளிவரக் காரணமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளுக்கு என்னால் இயன்ற வகையில் உதவி வருகிறேன். அவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆல்பம் வெளியிடுகிறேன். இதன்மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் அவர்களுக்கே தரவுள்ளேன்.
இவ்வாறு பிரகாஷ் கூறினார்.
குறுந்தகடு வெளியிட்ட ஏ.ஆர்.ரஹைனா கூறும்போது, ‘‘ஒருவரை உற்சாகப்படுத்துவதற்காக கூறிய வார்த்தை ஒரு ஆல்பம் வெளியிடும் அளவுக்கு சாதனையாக மாறியிருப்பது வியக்கவைக்கிறது. இனி, யார் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தாலும், அவர்களை ஊக்கப்படுத்துவேன்’’ என்றார்.
‘ராப்’ பாடல் பாடும் பிரகாஷ் மிருதங்கம், கர்நாடக இசையும் பயின்று வருவதாக அவரது தந்தை ஜி.ரகுராமன் பெருமையுடன் கூறினார்.