Last Updated : 18 Feb, 2018 11:35 AM

 

Published : 18 Feb 2018 11:35 AM
Last Updated : 18 Feb 2018 11:35 AM

வெளி மாநிலங்களில் இருந்து தினசரி 100 டன் வருகை: உள்ளூர் நெல்லுக்கு விலையில்லை - அடுத்தடுத்த நெருக்கடிகளால் அதிர்ச்சியில் விவசாயிகள்

ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 100 டன் நெல், ரயில்கள் மூலம் கொண்டுவரப்படுவதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் நெல் விலைபோகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரமே நெல் அறுவடை பணிகள் பரவலாக தொடங்கிய நிலையில், திருப்பதிசாரம், இறச்சகுளம், தேரூர், பெரும்செல்வவிளை போன்ற பகுதிகளில் தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் நல்லபடியாக இருக்கிறேதே என்று மகிழ்ந்த விவசாயிகள், தற்போது கொள்முதல் விலை யைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திகைத்து நிற்கின்றனர்

வியாபாரிகள் பலர் வயல்களுக்கே வந்து நெல் கொள்முதல் செய்கின்றனர். கடந்த கன்னிப்பூ சாகுபடியில் குறைவான பரப்பளவில் நெல் அறுவடை நடந்தாலும் குவிண்டாலுக்கு 2,200 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தது.

ஆனால் இம்முறை அறுவடை தொடங்கியபோது குவிண்டால் 1,800 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டது. அது தற்போது மேலும் குறைந்து 1,700 ரூபாய் என்றாகியுள்ளது. இன்னும் விலை குறையும் நிலை வந்தால் என்ன செய்வது என, விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

வியாபாரிகள் முகாம்

முன்னோடி விவசாயி தங்கப்பன் கூறும்போது, “ கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விவசாய பரப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் விவசாயிகள் பலர் ஆர்வத்தால் தொடர்ந்து நெல் பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தரமான விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது லாபம் கிடைத்தால் மட்டுமே அடுத்த போக நெல் சாகுபடியை மேற்கொள்ள முடியும்.

கன்னியாகுமரி மாவட்ட நெல் பிற மாவட்டங்களை விட குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவது ஏன் எனத் தெரியவில்லை.

அறுவடை தொடங்கிய 10 நாட்களில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது. இன்னும் விலையை குறைத்து கேட்பார்கள் போலிருக்கிறது.

டெல்டா, மதுரை மாவட்ட வியாபாரிகள் தற்போது இங்கு முகாமிட்டுள்ளனர் அரசு கொள்முதல் நிலையம் இல்லை என்பதால், அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை தலையிட்டு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் உயர்த்த வேண்டும்” என்றார் அவர்.

விவசாயிகளுக்கு பேரிழப்பு

வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “ கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியிருந்தாலும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 100 டன் நெல் ரயில் மூலம் இங்கு வருகிறது.

இங்குள்ள அரவை மில்கள் மூலம் அரிசியாக்கப்பட்டு அவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எனவே தான் உள்ளூரில் அறுவடையாகும் நெல்லை குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்கின்றனர். கடந்த போகத்தைவிட விலை குறைவாக விற்பனையாவது விவசாயிகளுக்கு பேரிழப்பு தான்.

விலை மேலும் குறையாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x