“பொதுமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு” - முத்தரசன் @ ஸ்டெர்லைட் மூடல்

“பொதுமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு” - முத்தரசன் @ ஸ்டெர்லைட் மூடல்
Updated on
1 min read

சென்னை: “ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை உறுதி செய்து மக்களின் நல்வாழ்வுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு முன்னுரிமை அளிக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி நகரில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் நல்வாழ்வு கடுமையாக பாதிக்கபட்டு வந்தது. ஆலைக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தது. இதனால் ஆலை நிர்வாகம் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் பொது மக்கள், ஸ்டெர்லைட் ஆலையின் சட்ட அத்துமீறலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பெரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த அசாதாரண சூழலைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் ஆலையின் கோரிக்கையை நிராகரித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்தது, மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆலை நிர்வாகத்தின் அத்துமீறலை பட்டியலிட்டு, அது சட்டம், விதிமுறைகள், பொது ஒழுங்குமுறை எது பற்றியும் கவலைப்படாது செயல்பட்டதை சுட்டிக்காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியப் போக்கை விமர்சித்துள்ளது.

பொதுமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in