

மதுரை: பிரதமர் மோடியின் சமீபத்திய வருகையால் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது. பல்லடம், நெல்லையில் பிரதமரின் பேச்சு ஒரு வகையில் அதிமுக, திமுகவினரிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி வெளிவருவதற்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதிப் பங்கீடு நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி மற்றும் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியன இணைந்துள்ளன. பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக, பாமக இன்னும் கூட்டணி முடிவை தெரிவிக்கவில்லை. நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது.
தமிழக அரசியல் களம் இவ்வாறு இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப். 27, 28-ல் தமிழகம் வந்தார். முதல் நாள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘எண் மண், எண் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் அவர் பேசும்போது, அதிமுகவின் முக்கியமான தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை நினைவுக்கூர்ந்து பேசினார். குறிப்பாக, எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு நல்லாட்சி தந்ததாகவும், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா மட்டுமே நல்லாட்சி வழங்கியதாகவும் பாராட்டினார்.
எம்ஜிஆர் பற்றி மேலும் குறிப்பிடுகையில், “அவர் ஆட்சிக்கு வர குடும்ப அரசியல் காரணம் இல்லை. திறமையால் ஆட்சியை பிடித்தார்” என்று கூறி திமுகவை மறைமுகமாக சாடிய பிரதமர், “தமிழக மக்கள் மீது ஜெயலலிதா எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியும்” எனக் குறிப்பிட்டார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், அதிமுக செல்வாக்குள்ள கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை திடீரென பிரதமர் மோடி புகழந்து பேசியது, அதிமுக வாக்குகளையும், அதிமுக அதிருப்தி வாக்குகளையும் பாஜகவுக்கு திருப்பும் திட்டம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும் பிரதமரின் இந்தப் புகழாரப் பேச்சுக்கு அதிமுகவில் யாரும் எதிர்வினையாற்றவில்லை.
பல்லடம் பொதுக்கூட்டத்தில் அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்த பிரதமர் மோடி, மறுநாள் நெல்லை பொதுக் கூட்டத்தில் திமுகவை வெளுத்து வாங்கினார். பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்துள்ளார். அப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களில் பேசும்போது, திமுக வாரிசு அரசியல் செய்வதாகவும், ஊழல் செய்வதாகவும் விமர்சனம் செய்வார். ஆனால், நெல்லைக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு “தமிழகத்தில் திமுக அகற்றப்படும்” என ஆவேசமாக பிரதமர் பேசியிருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதோடு நிற்காமல், “திமுக பொய் வேஷம் போடுகிறது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இனி திமுகவைப் பார்க்க முடியாது. தமிழகத்தில் இனியும் திமுக இருக்க முடியாது. இனி நீங்கள் எங்கு தேடினாலும் திமுக இருக்காது. பணத்துக்காக தமிழர்களை, தமிழ் மொழியை, தமிழ் இனத்தை சிறுமைப்படுத்தி, கேவலப்படுத்தும் திமுக, மக்களவைத் தேர்தலுக்குப் பின் முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும்” என திமுகவை வெளுத்து வாங்கினார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு கனிமொழி எம்.பி உடனடியாக எதிர்வினையாற்றினார். அப்போது அவர், ‘திமுக கணாமல்போகும் என்றவர்களைத்தான் தற்போது காணவில்லை. திமுக இருக்கிறது’ என்றார். தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் பேச்சுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளனர். திமுக தரப்பில் என்ன பதிலடி கொடுத்தாலும் பிரதமரின் நெல்லை பேச்சால் திமுகவின் தூக்கமும், பல்லடம் பேச்சு அதிமுகவினரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.
இது குறித்து பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எப்போதும் பொதுக் கூட்டங்களில் மென்மையாக பேசும் பிரதமர், இந்த முறை எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டியும், ஜெயலலிதா பேசுவதைப் போல் திமுக காணாமல்போகும் என பேசி அதிமுகவினர் அன்பை மோடி பெற்றுள்ளார். பிரதமர் அடுத்தடுத்து தமிழகம் வரும் போதும் அவர் பேச்சு இப்படித்தான் இருக்கும். இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது அன்பு வைத்திருக்கும் உண்மையான அதிமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்புவார்கள். இதனால் தமிழகத்தில் பாஜக மேலும் பலப்படும். மக்களவைத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும்” என்றனர்.