Published : 01 Mar 2024 01:09 PM
Last Updated : 01 Mar 2024 01:09 PM

போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்குக: தமிழக அரசுக்கு டிடிவி கோரிக்கை

தினகரன் | கோப்புப் படம்

சென்னை: தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மதுரையில் நடத்திய சோதனையில் 30 கிலோ எடையிலான போதைப் பொருள் ஒரே நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் எனும் திமுக முன்னாள் நிர்வாகி உட்பட பலர் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரை ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக அரசின் அலட்சியப் போக்கால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனியாவது போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.” என தினகரன கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x