

சென்னை ராயபுரத்திலுள்ள கல் மண்டபம் பகுதியில் வீட்டுக்குள் சென்றால் பி.எஸ்.என்.எல் அலை பேசிக்கான சிக்னல் கிடைக்கவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகார் வந்துள்ளது.
இது தொடர்பாக ராயபுரத்தை சேர்ந்த அப்துல் சுக்கூர் என்பவர் கூறியதாவது: நான் கடந்த மூன்று வருடமாக பி.எஸ்.என்.எல். சிம் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எப்போதெல்லாம் வீட்டுக்குள் நுழைகிறேனோ அப்போதெல்லாம் சிக்னல் கிடைப்பதில்லை. வீட்டை விட்டு வேளியே வந்ததும் உடனே சிக்னல் கிடைக்கிறது. கடந்த மூன்று வருடமாக இந்த பிரச்சினை உள்ளது. பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளிடம் இது தொடர் பாக பலமுறை பேசியும் எந்த பலனும் இல்லை.
எனக்கு மட்டுமன்றி எங்கள் வீட்டுக்குள் அருகே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பலருக்கும் இந்த பிரச்சினை உள்ளது. எங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் வேறு சில தனியார் நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல முறையில் சிக்னல் கிடைக் கிறது. ஆனால் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். சேவை மட்டும் சரியானபடி கிடைப்பதில்லை. இத்தனைக்கும் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மிக அருகில் தான் உள்ளது. எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மூன்று வருடமாக சிக்னல் கிடைக்காமல் இருப்ப தற்கு சாத்தியமேயில்லை.
இந்த பிரச்சினை சில சமயங்களில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்படலாம். வீட்டின் அமைப்பு சிக்னல் ஊடுருவ முடியாத அளவுக்கு இருந்தால் இது மாதிரியான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
ராயபுரம் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.எல். கோபுரத்தை ஆய்வு செய்து வாடிக்கையாளருக்கு உரிய தீர்வினை வழங்குவோம் “ என்றனர்.