Published : 01 Mar 2024 06:17 AM
Last Updated : 01 Mar 2024 06:17 AM

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்

அரவிந்தர் ஆசிரமத்துக்கு நேற்று வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்ற ஆசிரமப் பொறுப்பாளர்கள். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.

சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி, பாரத் நிவாஸ் கலையரங்கில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று புதுச்சேரி வந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப். 29-ம் தேதியான நேற்று அன்னையின் தங்க தினமாக, ‘பொன்னொளி பூமிக்கு வந்த நாள்’ என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அரவிந்தர் ஆசிரமத்தில் நேற்றுகாலை கூட்டு தியானம் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னை, அரவிந்தர் ஆகியோரின் அறைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவிடத்தில் சிறப்பு தரிசனம் செய்தார். தமிழகஆளுநர் வருகையொட்டி, ஆசிரமத்துக்கு வருகைதந்த பல்வேறு மாநில பக்தர்கள், வெளிநாட்டவர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதிக அளவில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை போலீஸார் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆசிரமத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் ஆசிரமத்தில் இருந்த ஆளுநர் ரவி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபிறகு, பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x