

மயிலாடுதுறை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை மூலம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியவை. கோயில் திருப்பணிகள், தீர்த்தக் குளங்களைச் சீரமைத்தல், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், உழவுத் தொழிலை மேம்படுத்துதல், உழவுத் தொழிலை நிலை நிறுத்த மானியங்கள் வழங்குதல், பசிப்பிணிபோக்கும் அன்னதானங்களை கோயில்களில் நிகழச் செய்தல்போன்ற நற்பணிகளுடன், அறநிலையத் துறை பதிப்பகத்தில் 2-ம் கட்டமாக 108அரிய ஆன்மிக நூல்களை வெளியிட்டு சமய உணர்வை வளர்த்தல்ஆகிய அறிவுப் பணியையும் ஆற்றிவருதல் சிறப்புக்குரியது.
அண்மையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், ஏனைய ஆதீனங்களுடன் நானும் பங்கேற்று, ஆலோசனைகளைக் கூறியது மகிழ்வைத் தரக்கூடியதாக அமைந்தது.
மார்ச் 1-ம் தேதி (இன்று) பிறந்த நாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமும், வளமும்தழைத்து, தமிழகம் மென்மேலும் சிறக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும் என நமது ஆன்மார்த்தமூர்த்திகளாகிய ஞானமா நடராஜப் பெருமான் திருவடிமலர்களை சிந்தித்து வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.