

விழுப்புரம்: மரக்காணம் தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தக் கோயிலுக்கு ஆண்டு தோறும் 22 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த கோயிலை இந்து அறநிலையத் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவிப்பு செய்தது. இதை எதிர்த்து பொது மக்கள் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் முழு கடையடைப்பு போராட்டங்கள் நடந்தன. பொது மக்களின் இது போன்ற எதிர்ப்புகளையும் மீறி இந்து அறநிலையத் துறை இக்கோயிலை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு நோட்டீஸை கோயில் வளாகத்தில் ஒட்டியது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இக்கோயிலுக்கு புதிதாக அறங்காவல் குழுவினரை நியமிக்கப் போவதாக இந்து அறநிலையத் துறை தற்போது அறிவிப்பு செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதிதாக அறங்காவல் குழுவினரை நியமித்தால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து விட்டு தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கப் போவதாக மரக்காணம் வட்டாட்சியர், காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர்.