Last Updated : 08 Feb, 2018 07:31 PM

 

Published : 08 Feb 2018 07:31 PM
Last Updated : 08 Feb 2018 07:31 PM

தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக புதுமடம் கிராமம் தேர்வு

தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த புதுமடம் கிராமம் மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராம விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிராம மேலாண்மை மையம் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, குடிநீர், மருத்துவம், தனிநபர் கழிப்பறை, மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும், சிறந்த மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளை தேர்வுசெய்து தீன தயாள் உபாத்யாய கிராம விருதினை வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் சிறந்த 23 ஊராட்சிகளை தேர்வு செய்து விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக புதுமடம் கிராமம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் ஒன்றியத்திற்குள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந்துள்ளது புதுமடம் கடற்கரை கிராமம்.

சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து புதுமடம் மக்கள் நலமன்றத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது அனிஸ் கூறியதாவது:

''புதுமடம் ஊராட்சியில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வந்தாலும் அனைத்து சமுதாய மக்களுடனும் சமய நல்லிணக்கத்துடன் உறவு முறைகளுடன் வாழ்ந்து வருகிறோம். புதுமடத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வணிகம் மற்றும் பணிபுரிந்து பொருளீட்டி வருகின்றனர். இதில் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை கொடுத்து கிராமத்தின் அடிப்படை வசதிகள், மருத்துவம், சுற்றுச்சூழல் காப்பதற்காக புதுமடம் பைத்துல்மால் சங்கம் உருவாக்கப்பட்டது.

இந்த பைத்துல்மால் மூலம் புதுமடத்தில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்காக டிராக்டர் வாங்கி இரண்டு துப்புரவுப் பணியாளர்களும், ஓட்டுநரும் நியமனம் செய்து அவர்களுக்கான மாத ஊதியமும் பைத்துல் மால் மூலம் வழங்கப்படுகிறது.

புதுமடத்தைச் சேர்ந்த யாருக்காவது மருத்துவம், கல்வி உதவிகள் தேவைப்பட்டால் அவர்களின் பொருளதாரப் பின்னணிகளை அறிந்து உடனடியாக பைத்துல்மால் மூலம் உதவிகள் செய்யப்படுகிறது. இதனால் புதுமடத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாணவரும் இடை நிறுத்தம் செய்யப்படவில்லை.

சமீபத்தில் புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு புதுமடத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து ரூ.46 லட்சத்தில் கலையரங்கத்தை கட்டிக் கொடுத்தனர்.

கொழும்பில் வணிகம் செய்யும் புதுமடத்தைச் சேர்ந்த முகமது உனேஸ் புதுமடம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்காக தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுத்தார். மேலும் புதுமடத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடல்சார் ஆய்வு மையம் அமைப்பதற்காக 5 குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்களின் 71/2 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுத்து உதவினார்.

மேலும் புதுமடத்தில் புதுமடம் மக்கள் நலமன்றம், இஹ்ஸான் குழுமம், சூப்பர் கிங்ஸ், முப்பது பேர் கொண்ட குழு, இஸ்லாமிய அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களின் கிராமத்திற்கு தேவையான சேவைகளை தாங்களாகவே முன்வந்து செய்து கொள்கிறனர்.

புதுமடம் ஊராட்சிக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விருது எங்கள் கிராம மக்களின் சமய நல்லிணக்கத்தினையும், இங்குள்ள அமைப்புகளின் தன்னார்வப் பணிகளை மேலும் ஊக்குவிக்கும்'' என்றார் முகம்மது அனிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x