Published : 29 Feb 2024 05:58 PM
Last Updated : 29 Feb 2024 05:58 PM
மதுரை: கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணியை மேற்கொண்டார். இந்த அகழாய்வில் 5000-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன.
இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீராமன் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடந்த 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, கீழடி அகழாய்வு பணியை அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளவும், மத்திய அரசு வசமிருக்கும் 2ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 2200 ஆண்டு பழமையான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்கவும், அந்தப் பொருட்களை கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், “அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017-ம் ஆண்டு கவுகாத்தி மாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தென்னிந்திய கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார்.
கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2-ம் கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, “தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியில் உள்ளார். அவரை இடமாற்றம் செய்வதில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 9 மாதங்களில் கீழடி 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடவுள்ளது. அந்த அறிக்கை வெளியானதும் இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தப் பொருட்களை தமிழக அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT