

தமிழகத்தில் பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த பாஜக பொதுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கடந்த முறை ‘கேலோ இந்தியா’ போட்டி தொடக்க விழாவுக்கு தமிழகம் வந்த பிரதமரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்தார். அதற்கு முன்னதாக திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்க மோடி தமிழகம் வந்திருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். ஆனால், இம்முறை பிரதமர் - ஓபிஎஸ் இடையே எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை. அதன் பின்னணி என்ன?
பாஜக திட்டம் என்ன? - ’கூட்டணி உறுதி செய்யாத சில தலைவர்கள் பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்’ என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கூட்டணியை உறுதி செய்த கட்சித் தலைவர்கள் மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், பாஜகவில் தற்போது கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான் என்ன?
இரண்டு நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்தபோதும், பன்னீர்செல்வத்துக்கு, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து, பாஜக கூட்டணியில் தாங்கள் இருப்பதாகக் கூறி வருகின்றனர். ஓபிஎஸ் பலமுறை வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், பாஜக இன்னும் இவர்களின் கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கிறது. இதனால், ஓபிஎஸ் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்னும் கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் அழைக்கப்படாதது ஏன்? - பாஜக பொதுக் கூட்டத்தில் அதிமுக தலைவர்கள் பற்றி பிரதமர் மோடி பேசியது அதிமுக வாக்குகளைக் கவர வியூகம் என சொல்லப்படுகிறது. அதேவேளையில், ’தொடர்ந்து பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை' என்பதை எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்தாலும், மத்திய பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை அவர் முன் வைக்காமல் இருக்கிறார். எனவே, பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்களும் எழுகிறது.
ஆனால், பாஜகவுக்கு நெருக்கமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருக்கும் காரணத்தால், அதிமுக பாஜகவில் இணைய தயக்கம் காட்டுவதாக கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. எனவே, மறைமுகமாகவும், ஜி.கே வாசனை தூதுவிட்டு அதிமுகவுடன் பாஜக இணையும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அதிமுக அதற்கு இறங்கி வரவில்லை. எனவே, பாஜகவில் இணைய அதிமுகவுக்கு சிக்னல் கொடுப்பதற்காக ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இதனால், பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அழைப்பில்லை என்னும் கருத்தை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.
தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன் பற்றிய கேள்விகளுக்கு பாஜக தலைவர்கள் முறையான விளக்கங்களை சொல்வதில்லை. அவர்களைக் கடந்து செல்கின்றனர். அதன் அடுத்த நகர்வாக, அதிமுகவுக்காக ஓபிஎஸை பாஜக தள்ளிவைக்க திட்டமிட்டிருக்கிறது. வரும் 4-ம் தேதிக்குள் பாஜகவின் கூட்டணி குறித்து அறிவிப்பு என சஸ்பென்ஸ் வைக்கின்றனர் பாஜகவினர்.
இன்னும் சில நாட்களில் பாஜகவில் இணையும் பிரதான கூட்டணிக் கட்சிகள் யாரென்று தெரியவரும். அதற்கான சமிக்ஞையாக பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.