

மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நேற்று மாலை மயிலாடுதுறையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னதாக மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவுத் தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மயிலாடுதுறை கண்ணாரத் தெரு, பட்டமங்கலத் தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் சீட், பணம் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய தேவை, நெருக்கடி நாம் தமிழர் கட்சிக்கு இல்லை. அதனால் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் மக்களை சந்திக்கிறோம்.
சின்னத்தை முடக்கி நாம் தமிழர் கட்சியை முடக்கிவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் நெருக்கடிகள் தந்தால் இன்னும் வேகமாக பயணிப்போம். இத்தொகுதியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.