

சென்னை: செல்வாக்குமிக்க நபராக திகழ்வதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் ரூ.67 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன்14-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 250 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறையும், உயர் நீதிமன்றத்தில் ஒரு முறையும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும்,அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது உத்தரவில் கூறியதாவது:
இந்த ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு ஒருநாள் முன்பாக செந்தில் பாலாஜி தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுவும்கூட, தனக்கு இம்முறை ஜாமீன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜினாமா செய்துள்ளார்.
சிறைக்குள் இருந்தாலும் 8 மாதமாக இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடித்து வந்துள்ளார். இதன்மூலம்தமிழக அரசு இவருக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தையும், அவரது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் அறிய முடிகிறது. தவிர, அமைச்சர் பதவியை துறந்தாலும், தற்போதும்கூட ஆளும்கட்சிஎம்எல்ஏவாக தொடர்ந்து பதவியில் நீடிப்பதால், சாட்சிகளை கலைக்க மாட்டார் என்று கூறுவது ஏற்கும்படி இல்லை.
ஏனெனில், இந்த வழக்கின் பெரும்பாலான சாட்சிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள். மேலும் அவருக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டவை என்பதால் அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது.
கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், பொதுநலனை கருத்தில் கொண்டுதற்போதைய சூழலில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது.
அதேநேரம், செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் இருப்பதால், இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தினந்தோறும் என்றஅடிப்படையில் 3 மாதங்களில் விசாரித்துமுடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
5-வது முறையாக தள்ளுபடி: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி5 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.