Published : 29 Feb 2024 05:17 AM
Last Updated : 29 Feb 2024 05:17 AM

திமுக இருக்காது என்று கூறியவர்கள்தான் காணாமல் போயுள்ளனர்: பிரதமர் மோடியின் கருத்துக்கு டி.ஆர்.பாலு, கனிமொழி பதில்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்குப்பின் திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடி பேசியதற்கு பதில் அளித்துள்ள எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி. இதுபோல் கூறியவர்கள்தான் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், மக்களவைத் தேர்தலுக்குப்பின் திமுக என்ற கட்சியே இருக்காது என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழி கூறியதாவது: தமிழகத்துக்கு இதுவரை எந்த ஒரு திட்டமும் மத்திய அரசு நிறை வேற்றவில்லை. மழை வெள்ள பாதிப்புக்கு கேட்ட நிதியை கூட அளிக்கவில்லை. வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.70 ஆயிரம் என கால் பங்கு நிதிதான் மத்திய அரசு தருகிறது. மீத தொகையை தமிழக அரசுதான் வழங்குகிறது. ஆனால், அதற்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் என்று பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் திமுக என்ற கட்சியே இருக்காது என்று கூறிய பலரை நாங்கள் பார்த்துள்ளோம். அவ்வாறு கூறியவர்கள்தான் காணாமல் போயுள்ளனர்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மு.கருணாநிதி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைகளில் கோரிக்கை விடுத்து வந்தோம். அதற்கான இடத்தை தமிழக அரசுதான் துரிதமாக ஒதுக்கியது.

அரசு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக நானும், மூத்த அமைச்சரான எ.வ.வேலுவும் பங்கேற்றோம். எங்கள் பெயரைக் கூட சொல்ல பிரதமருக்கு மனம் வரவில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மதம் வேறு, அரசியல் வேறு என்பது மக்களுக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் எத்தனை கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றியுள்ளது என்பதை கணக்கிட்டு கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்: திமுக அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர். தனக்கு எதிரியே இல்லை என்று இருந்த பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து 'இண்டியா' கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் பிரதமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.

மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாத உங்களால் மதுரைக்கு எப்படி வர முடிகிறது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூடத் தமிழகத்துக்கு தரவில்லை. தமிழகம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்குகிறது மத்திய அரசு.

திமுகவை இனிப் பார்க்க முடியாது. இனித் திமுக எங்குத் தேடினாலும் கிடைக்காது எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது. திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x