

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜன.24-ம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜன.27-ம் தேதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சாந்தன் காலமானார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், மரணமடைந்தார்.
சாந்தனின் உடல் சொந்த ஊரான இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு கொண்டு செல்லவுள்ளதால், அவரது உடல் பிரேதப் பரிசோதனையுடன் எம்பார்மிங் செய்யப்படுகிறது. இன்று சாந்தனின் உடல் விமானம் மூலமாக இலங்கை கொண்டு செல்லப்படுகிறது.
கட்சி தலைவர்கள் அஞ்சலி: முன்னதாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூட்டம் அருகே வைக்கப்பட்டிருந்த சாந்தனின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி ஆகியோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.