

காஞ்சிபுரம்: பள்ளிகளின் வளர்ச்சிக்காக பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ரூ.2,501 கோடி நன்கொடை வந்துள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.668 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கல் கிராமத்தில் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் "பெற்றோரைக் கொண்டாடுவோம்" என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டல மாநாடாக இந்தமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதிபங்கேற்று ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணைகளை வழங்கி பேசியதாவது:
மதுரை, திருச்சி, தர்மபுரி, கோவை ஆகிய மண்டலங்களில் இதே போன்ற நடைபெற்றது. இந்தமாநாட்டில் சுமார் 1.50 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில் 35 ஆயிரம் பெற்றோர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ரூ.2,501 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.668 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மட்டும் இல்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கல்விவளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைய முடியும். பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: கல்வியையும், சுகாதாரத்தையும் தமிழக அரசு இரு கண்களாக பார்க்கிறது. சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.44 ஆயிரத்து 42 கோடி நம்முடைய பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 முதல் தற்போதுவரை சுமார் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணையும், அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய 125 நன்கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், பள்ளிக்கல்வித் துறை அரசுச் செயலர் ஜெ.குமரகுருபரன், பொது நூலக இயக்ககம் இயக்குநர் க.இளம்பகவத், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் சு.நாகராஜ முருகன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.