Published : 10 Feb 2018 11:31 AM
Last Updated : 10 Feb 2018 11:31 AM

மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் நூதனப் போராட்டம்

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண் டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில், பட்டதாரிகள் பக்கோடா விநியோகித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஏன் பக்கோடா விற்பதுகூட வேலைவாய்ப்புத்தான், வங்கி மூலம் கடன் பெற்று பக்கோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம்’ என்ற ரீதியில் பேட்டி அளித்திருந்தார் பிரதமர் மோடி. இதற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பிரமதர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காந்திபுரத்தில் நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது. பட்டதாரி உடையணிந்து வந்த இளைஞர்கள், பக்கோடா தயாரித்து, பொதுமக்களுக்கு விநியோகித்து, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தலைமை வகித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசும்போது, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆண்டுக்கு 40 லட்சம் இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து, மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், புதிதாக எவ்வித வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. மேலும், லட்சக்கணக்கானோர் வேலையிழந்து, தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியபோது, பக்கோடா விற்று பிழைக்கலாம் என்று கேலி பேசுகின்றனர். எனவே, இதைக் கண்டித்துப் போராட் டம் நடத்துகிறோம்’ என்றார்.

மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகேஷ்குமார், நிர்வாகிகள் சிவக்குமார், மணி, செந்தில்குமார், கவிதா, உமா, ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x