

மயிலாடுதுறை: பிரதமர் மோடியின் தந்திர விளையாட்டில் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம், கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க, கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக இருக்கும் எந்த அணியிலும் நிச்சயமாக இடம் பெற மாட்டோம்.
பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்பது கருத்து திணிப்பு. ஊசலாட்டத்தில் இருக்கும் மக்களை இழுக்கக் கூடிய தந்திர யுக்தி. இவ்வாறு அவர்கள் திரும்பத் திரும்ப சொல்வதால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது. எனவே, ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்த்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு எம்.பி என்பதை, 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு எம்.பி என மாற்றினால் நல்லது. இதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை பிரதமர் மோடி புகழ்ந்து பேசி, தனது தந்திர விளையாட்டை நகர்த்துகிறார். இதில், அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் மவுலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் ஈரோடு பாரூக், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்கள் ஹாஜா சலீம் ( மேற்கு ), ஆக்கூர் ஷாஜகான் ( கிழக்கு ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.