Published : 11 Aug 2014 09:15 AM
Last Updated : 11 Aug 2014 09:15 AM

பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இது ஜனவரி 28-ம் தேதி வரை தண்ணீர் திறப்பு நீடிக்கும். அதன்பின், அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும். இந்நிலையில், இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இச்சூழலில் கர்நாடக மாநிலத் தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. அதனால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகமானதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ‘கிடுகிடு’ வென உயரத் தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதனிடையே நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த மாதம் 18-ம் தேதி 47.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று மதியம் 12 மணிக்கு 109.10 அடியைக் கடந்தது. அணையின் நீர் இருப்பு 77.180 டிஎம்சியாக இருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 15-க்கு முன்கூட்டியே, 10-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீ்ர்செல்வம், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு, காவிரிக்கு மலர் தூவினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியது:

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 42,982 கன அடி தண்ணீர வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக, முதன்முறையாக 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப முதல்வர் உத்தரவுப்படி அணையின் நீர் திறப்பு அதிகரிக்கப்படும். இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும். தமிழகத்தில் போதிய அளவு விதை, உரம் கையிருப்பு உள்ளது. கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு, முதல்வர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

விழாவில் அமைச்சர்கள் இடைப் பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, செந்தில்பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் க.மகரபூசணம், மேயர் எஸ். சவுண்டப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.விஜயலட்சுமி பழனிசாமி, எம்.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம், எஸ்.மாதேஸ் வரன், பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x