Published : 21 Feb 2018 06:58 AM
Last Updated : 21 Feb 2018 06:58 AM

உள்துறை, பள்ளிக்கல்வி, வீட்டு வசதி துறைகளில் ரூ.289 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்- முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவியுடன் ரூ.2 கோடியே 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை, ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 28 பள்ளிகளில் ரூ.46 கோடியே 67 லட்சத்தில் வகுப்பறை, ஆய்வகம், கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் ஆசிரியர் இல்லம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 58 பள்ளிகளில் ரூ.97 கோடியே 81 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் என ரூ.149 கோடியே 58 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

அதேபோல, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சென்னை கே.கே.நகர் மரவேலைப் பிரிவு திட்டப் பகுதியில் ரூ.110 கோடியே 17 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 407 சுயநிதி திட்ட குடியிருப்புகள், 154 இடமாறுதல் அரசு ஊழியர் குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கான வாடகை குடியிருப்புகள், உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கூடிய ரூ.23 கோடியே 67 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 541 வீடுகளையும் திறந்து வைத்தார்.

இதுதவிர, உள்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 34 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள சமையலறையுடன் கூடிய காவலர்களுக்கான தங்குமிடம், ரூ.6 கோடியே 38 லட்சத்து 79 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள 23 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையஙகள், தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணிக்கான தங்குமிடம், தீயணைப்பு கோட்ட அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு சிறைத் துறை உதவி சிறை அலுவலர் பணிக்கு தேர்வான 83 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக 7 பேருக்கு முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x