“கடையில் கப் வாங்கிக் கொண்டு மேடையில் வாங்கியதாக...” - அண்ணாமலையை கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்

ரத்த தானம் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்
ரத்த தானம் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

மதுரை: “கடைகளில் ‘கப்’ வாங்கிக் கொண்டு மேடையில் வாங்கியதாக அண்ணாமலை தன்னையே பெருமைப் பாராட்டுகிறார்” என்று அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கிண்டலாக பேசியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜெ.பேரவை சார்பில் மதுரை அருகே டி குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தானும் ரத்த தானம் கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானத்தை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.மகேந்திரன், கே.மாணிக்கம், கே தமிழரசன், எம்.வி கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்குப் பின் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “பல்லடத்தில் பிரதமர் பொதுக் கூட்டத்தில் பேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா தியாகத்தை எடுத்துச் சொல்லி உள்ளார். தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்து இருந்தாலும், இந்த இருபெரும் தலைவரின் சிறப்பு எங்களை போன்ற அதிமுக தொண்டர்களை பெருமைக் கொள்ள வைக்கிறது. அந்த இருபெரும் தலைவர்களின் வாரிசாக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார்.

கரோனா காலகட்டங்களில் போராடிய மக்களுக்காக தடுப்பு ஊசி இலவசம் என்று அறிவித்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதனால், மக்கள் அதிமுக பக்கம் உள்ளனர். அதிமுகவை ஒரு போதும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைக்கு திமுக தெருமுனை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையை காவு கொடுத்து விட்டார்கள். இன்று வரை மேகேதாட்டு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை.

இரண்டு தினங்கள் முன்பு பாலாறில் ஜெகன் மோகன் ரெட்டி அணைக்கட்டப்படும் என்று கூறுகிறார். அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. முல்லைப் பெரியாரில் அணைக்கட்டப்படும் என கூறிய கேரள முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மூன்று முதல்வர்கள் தமிழகத்தின் ஜீவதார உரிமைக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

தன்னுடைய அரசியல் கூட்டணிக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கிறார் ஸ்டாலின். தமிழர்களின் உரிமை காக்க தவறிய திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.

அண்ணாமலை கப்பு வாங்கி விட்டோம் என்று சொல்கிறார். மேடையில் வாங்கினதா? கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது. மேடையில் கப்பு வாங்கினால் தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள். கடையில் கப்பு வாங்கினால் கவுரவம் இருக்காது. கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் மேடை வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் அண்ணாமலை. அது மக்களிடத்தில் எடுபடாது. திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பை வெளியிட கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in