

“தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு” - பிரதமர் மோடி: தமிழகம் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து நெல்லையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன்” என்றார்.
“மக்களவைத் தேர்தலில் திமுக கூடாரத்தை கலைக்க வேண்டும்”: “அடுத்த 60 நாட்கள், பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் ஒரு போர்ப்படையைப் போல நின்றுகொண்டிருக்கிறோம். பாஜக மீது பொய் வழக்குப் போட்டு ஒடுக்கிவிடலாம், பத்திரிகையில் பொய் செய்தியைப் போட்டு பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிற திமுகவின் கூடாரத்தைக் கலைக்க வேண்டிய தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல்” என்று நெல்லையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
முன்னதாக, “திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று குலசேகரப்பட்டின விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
பிரதமர் மோடியின் தூத்துக்குடி பேச்சுக்கு கனிமொழி எதிர்வினை: “பாஜக மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். இந்தியாவிலேயே விளம்பரங்களுக்காக அதிகமாக செலவழிக்கக்கூடிய கட்சி பாஜக. அவர்களது விளம்பரங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக மத்திய அரசு கால்வாசிதான் பணம் கொடுக்கின்றனர். முக்கால்வாசி அளவு பணத்தை தமிழக அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கும் ரூ.70,000-ஐ வைத்துக்கொண்டு எந்த வீட்டையும் கட்ட முடியாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று பெயர் வைத்து, ஸ்டிக்கர் கொண்டிருப்பது பாஜகதான். பல மாநில எம்பிக்கள் இத்திட்டம் குறித்து பார்வையிட வரும்போது, ஏன் இந்த திட்டத்துக்கு முதல்வரின் திட்டம் என்று பெயர் வைக்கவில்லை என்று எங்களைக் கேட்கின்றனர். எனவே, யார் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கேத் தெரியும்” என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்வினையாற்றி உள்ளார்.
காவல் துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனிமனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல் துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன், 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல் சட்டப்பேரவையில் பரபரப்பு - நடந்தது என்ன?: “காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை முதல் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில், அவைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உள்பட 15 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து அவர்கள் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், 2024-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள், என்னை தாக்கக்கூடிய சூழலையும் உருவாக்கினார்கள். அவர்களை அமரும்படி நான் வேண்டினேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அனைத்துமே பதிவாகி இருக்கிறது என்று இமாச்சல் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
“இமாச்சல் அரசை கவிழ்க்க விடமாட்டோம்!” - காங்கிரஸ்: இமாச்சலப் பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில், "இமாச்சலப் பிரதேசத்தில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் துரதிருஷ்டவசமானது. தற்போதைக்கு இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசை காப்பாற்றுவதே எங்கள் முன்னுரிமை. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
இமாச்சலப் பிரதேச மக்கள் பாஜகவை நிராகரித்தார்கள். மக்களின் இந்த முடிவு மதிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பது என்ற ஒற்றை வாக்குறுதியுடன் மோடி அரசு இருக்கிறது. அது நிகழ நாங்கள் விடமாட்டோம்." என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தல்: ராணுவம் வரவழைப்பு: மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தென்க்கோல் என்ற மைத்தேயி அமைப்பினைச் சேர்ந்தவர்களால் காவல் அதிகாரி கடத்தப்பட்டார். பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காவல் அதிகாரியை மாநில போலீஸார் மீட்டனர்.
இதனிடையே, மணிப்பூரின் கிழக்கு இம்பால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கமாண்டோ போலீஸின் ஒரு பிரிவினர் ஆயுதம் துறந்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.
குஜராத் கடற்பகுதியில் 3,300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்: இந்திய கடற்படையும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் (என்சிபி) இணைந்து நடத்திய சோதனையில் குஜராத்தின் போர்பந்தர் அருகே சிறிய படகு ஒன்றிலிருந்து சுமார் 3,300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில் நடந்த போதைப் பொருள் பறிமுதலில் இதுவே மிகவும் அதிகமானது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
சாந்தன் உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது.