

நெல்லை: “வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.
நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக பேசினார். அப்போது, "நமது நாட்டை பிரதமர் மோடி எவ்வாறாக மாற்றியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் என்னை போன்றவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள்.
எனக்கு மிக்க மகிழ்ச்சி. வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது. நேற்று திருப்பூரில் பாஜக தொண்டர்கள் என்னை அரவணைத்துக் கொண்டு ஆதரித்த விதம் என் கண்களை நிறைய வைத்துள்ளது.
பாஜக தொண்டர்கள் தேசிய உணர்வோடு, தேசிய நீரோட்டத்தில் கலந்து இருக்கிறார்கள். அவர்களின் தேசிய உணர்வுக்கு அளவே இல்லை என்பதுதான் உண்மை. பிரதமர் மோடி மிகப் பெரிய மாற்றத்தை பெண்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். முத்தலாக் நடைமுறையை ரத்து செய்துள்ளார். இதெல்லாம் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, அதற்கு நிதி ஒதுக்கியும் ஆதரித்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் இருக்கும் அரசு அப்படியில்லை. திமுக, அதிமுக என எந்த அரசாக இருந்தாலும் சரி, 110 விதியின் கீழ் கூட திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், நிதி ஒதுக்கமாட்டார்கள். விளம்பரம் செய்வதோடு அந்த திட்டங்களின் கதை அன்றே முடிந்துவிடும். சில நேரங்களில் அடிக்கல் கூட நாட்டுவார்கள். எனினும், திட்டங்கள் நிறைவேறாது.
அதேநேரம், பிரதமர் மோடி அறிவித்த ஒரு திட்டம் கூட நடைமுறைப்படுத்தபடாமல் இல்லை. அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இந்தியா முழுவதும் பாஜக மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எந்தக் கட்சியும் இதனை மறுக்க முடியாது.
நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு, நிறைய சிரமங்களுக்கு பிறகு ஒரு நல்ல இடத்துக்கு வந்துள்ளேன். நான் இனி பாஜக குடும்பத்தில் ஒருவர். பாஜகவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று விஜயதரணி பேசினார்.