Published : 22 Feb 2018 09:01 AM
Last Updated : 22 Feb 2018 09:01 AM

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெருமிதம்

தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டும் தொழி்ல்நுட்பம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சென்னை அறிவியல் விழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் பெருமிதத்ததுடன் கூறினார்.

தமிழக அரசின் ஓர் அங்கமான அறிவியல் நகரம் சார்பில் சென்னை அறிவியல் விழாவின் தொடக்கவிழா மற்றும் 2016-ம் ஆண்டுக்கான சிறார் அறிவியல் அகாடமி விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் அறிவியல் நகரம் துணைத்தலைவர் சகாயம் தலைமை தாங்கிப் பேசும்போது கூறிய தாவது:

விஞ்ஞானத் திறமைகள்

மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் விஞ்ஞானத் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் அறிவியல் விழா நடத்தப்படுகிறது. தமிழக மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களிடம் நிறைய ஆர்வம், திறமை இருக்கிறது.

பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்னவர்கள் தமிழர்கள்.

தஞ்சை பெரிய கோயில்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் கட்டிடக்கலை அறிவுக்குச் சான்று. கரிகாலன் கட்டிய கல்லணை தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றுகிறது. தமிழர்கள் அந்த காலத்திலேயே விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு சகாயம் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் வாழ்த்திப் பேசும்போது, “சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

சிறந்த அறிவியல் மாதிரிகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனிசாமி பரிசுகளையும், சிறார் அறிவியல் விருதுகளையும் வழங்கினார். முன்னதாக, அறிவியல் விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் த.அறிவொளி வரவேற்றார். நிறைவாக, முதுநிலை நிர்வாக அலுவலர் சாய்நாத் நன்றி கூறினார்.

அறிவியல் கண்காட்சி

தொடக்கவிழாவைத் தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனி சாமி தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் அறிவியல் மாதிரிகள், புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகள், திடக்கழிவு மேலாண்மை, தண்ணீர் சுத்திகரிப்பு, மின்சேமிப்பு போன்றவை தொடர்பான அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவியல் கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். இக் கண்காட்சி நாளை முடிவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x