நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதித்தபோது மத்திய அரசு எந்தவித நிதியும் வழங்கவில்லை எனக் கூறி நெல்லை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (பிப்.28) கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கின் போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெல்லை மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருந்தனர்

அதன்படி இன்று (புதன்கிழமை) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டி அங்கு பாரத பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூனை ஏந்திக் கொண்டும் பாளையங்கோட்டையில் இருந்து ஊர்வலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்குப் புறப்பட்டனர். சிறிது தூரம் ஊர்வலமாகச் சென்ற அவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி, தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் இன்று காலை 9.30 மணிக்கு வரும் பிரதமர் மோடி, 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் அரசு விழாவில், சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார்.

தூத்துக்குடி அரசு விழாவில்பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் 11.15 மணிமுதல் 12.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பகல் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in