அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு இன்று முதல் 3 நாள் விசாரணை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு இன்று முதல் 3 நாள் விசாரணை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறுஆய்வு செய்யும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர்ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர்ஓ.பிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

இதேபோல, வீட்டுவசதி வாரியவீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக எடுக்கப்பட்ட வழக்கில், அவரை வழக்கில் இருந்து விடுவித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ள நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்தவழக்கை வரும் ஜூலைக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன் றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை நீதிபதி செப்டம்பருக்கு தள்ளிவைத்தார்.

அதேபோல, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவுள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு விசாரணை பிப்.28, 29 மற்றும் மார்ச் 5 ஆகியதேதிகளிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான விசாரணை மார்ச் 5, 6 ஆகிய தேதிகளிலும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான விசாரணை மார்ச் 7, 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in