Published : 28 Feb 2024 04:02 AM
Last Updated : 28 Feb 2024 04:02 AM

பல்லடம் பாஜக பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன? - மோடி நிகழ்வின் துளிகள்

படம்: ஜெ.மனோகரன்

திருப்பூர்: தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும் போதெல்லாம் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்துவதாக, பல்லடம் பாஜக பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜகவினர் பங்கேற்றனர். 5 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு, 40 அடி ருத்ராட்ச மாலை தயார் செய்து வந்த தொண்டர்கள் 30 பேர் சேர்ந்து மாநாட்டுக்கு தூக்கி வந்தனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் தலையில் காவி ரிப்பன் அணிந்தபடியும், தாமரை பேட்ஜ் அணிந்தும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் உட்பட பாஜக-வினர் மேடையில் பேசினர்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யாத்திரைக்கு வந்துள்ள உலக தலைவர், தமிழகத்தை காக்கும் தலைவரான மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் நேரடியாக இங்கு வந்துள்ளார்.

என் மண், என் மக்கள் யாத்திரை நாயகர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ், தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பேசினார். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளார்’’ என்றார்.

புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் அண்ணாமலையால்தான் மாற்றத்தை தர முடியும். அவர் பெயரை கேட்டாலே, இன்றைக்கு அரசியல் தலைவர்கள் அலறுகிறார்கள். பிரதமர் மோடி தனி மனிதர் அல்ல. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்த மனிதர்தான் பிரதமர் மோடி. தமிழ்நாடு, பாண்டிச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளில், 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்’’ என்றார்.

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் பொறுப்பு, பாஜக தொண்டர்களுக்கு உள்ளது. தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை தூத்துக்குடியில் நாளை ( இன்று ) நிறுவ உள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்துக்கான அவுட்டர் போர்ட் வந்துவிட்டால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் மாவட்டங்கள் பயன்பெறும். ரூ.17 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை வழங்க உள்ளார். தாய்மொழியான தமிழ் மொழியின் பெருமை குறித்து எந்த பிரதமரும் இந்த அளவு மேன்மைப் படுத்தி கூறியதில்லை. வடக்கில் இருப்பவர்கள் தமிழை கற்க வேண்டுமென வலியுறுத்தி கூறியது பிரதமர் மோடிதான். மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது, “திருப்பூரில் முடிக்கப்பட்ட யாத்திரை, தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். 1977-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தூக்கி எறியப்பட்டது. எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை, திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. திமுகவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர், தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்கில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 30 சதவீத வாக்குகளை பாஜக பெறும். திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் 30 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும். கொங்கு மண்டலம் என்று சொன்னால் மரியாதைக்குரிய இடம். இங்கு ஏற்படும் எழுச்சி நாளை திருநெல்வேலியிலும் ஏற்படும்’’ என்றார்.

காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் பேசும்போது, “பாஜக கட்சி நோட்டா அளவுக்கு வாக்குகளை வாங்குமா என்று கேள்வி கேட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு, இன்றைக்கு எங்குமாக பாஜக இருக்கிறது. திமுக என்பது பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழக்கூடிய கட்சி. காமராஜர் ஆட்சியின் பெருமையை அன்றைக்கு சொல்ல முடியவில்லை’’ என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘திமுக ஆட்சியின் மக்கள் விரோத போக்கை சுட்டி காண்பிக்கவே, அண்ணாமலையின் இந்த யாத்திரை. இந்த நடைபயணமானது, மக்களவைத் தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசும்போது, ‘‘பொய்யை வைத்து கட்சியை தொடங்கிய கும்பல், பொய்யை வைத்து தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. ஜனநாயகத்துக்கு ஆபத்து காங்கிரஸால்தான் உண்டு. குடும்ப ஆட்சி ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. மத்திய அரசு, மாநிலத்துக்கு அதிக நிதி தருகிறது. தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது’’ என்றார்.

பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்ட துளிகள்:

> ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா மை சிபிட்மன்ட் மற்றும் அவரது தாயார் ஆகியோர் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் பிரதமரின் மனதில் குரல் வானொலி நிகழ்ச்சியை கேட்பதுடன், நாட்டின் பல்வேறு மொழிகளில் ஆன்மிக பாடல்களை பாடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று கூட்டம் முடிந்த பிறகு கசாண்ட்ராவும், அவரது தாயாரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, தமிழ் மொழியில் உள்ள ஆன்மிக பாடலை கசாண்ட்ரா பாடினார். அதை பிரதமர் கையில் தாளம் தட்டி பக்தியுடன் கேட்டார்.

> சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் நரேந்திரமோடி பிரச்சார பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தார். அவருடன் மேலும் 2 ஹெலிகாப்டர்கள் வந்திருந்தன. பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் வந்தவுடன் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

> ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு, அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி ஜீப்பில் தொண்டர்களை சந்தித்தபடி பிரதமர் நரேந்திரமோடி வந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வந்தனர். பிரதமருக்கு உற்சாகமாக பூக்களை தூவியபடி தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

> ‘வணக்கம் நண்பர்களே’ என தமிழில் கூறி தனது பேச்சை பிரதமர் மோடி பேசத் தொடங்கினார்.

> பாஜக தலைவர் அண்ணாமலை பேசத் தொடங்கியபோது, திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகத்துடன் கை தட்டி ஆராவாரக் கூக்குரலிட்டனர். சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த உற்சாகத்தை, பிரதமர் மோடி ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

> 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் என்றாலும், இது மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களமாகதான் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் நேற்று மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

> பிரச்சாரக் கூட்டம் நடந்த மேடையின் முகப்புப் பகுதி தாமரை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

> மேடையில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் வடிவிலான பலகையில் ஒருபுறம் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரது படங்களும், மறுபுறம் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோரது படங்களும் இடம்பெற்றிருந்தன. மேடையின் கீழ் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் படம் இடம்பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x