

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 10 மாடிகள் கொண்ட எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும்போது அப்பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாகவும், எனவே நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டுமெனக் கோரி மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது அந்த கட்டுமானப் பணிக்கு திட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், உரிய கட்டணத்தை செலுத்தினால் திட்ட அனுமதி வழங்கப்படும், எனவும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘இந்த கட்டுமானத்தால் அருகில் உள்ளசெயின்ட் பிரான்சிஸ் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதமே பள்ளி நிர்வாகம் புகார் அளித்தும் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒலி மாசுவை தடுக்க வழக்கு தொடர்ந்த பிறகே அதிகாரிகள் கண் விழித்துள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கடந்த 8-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனை மீது புகார் அளித்துள்ள தனியார் பள்ளி கட்டிடம் உரிய திட்டஅனுமதி பெறவில்லை என தெரிவி்த்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட அந்தப் பள்ளி கட்டிடத்தின் திட்ட அனுமதி தொடர்பாக தற்போது கேள்வி எழுப்ப என்ன காரணம் என தெரியவில்லை.
அதேபோல மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முழுமைபெற்ற பிறகு அந்த பள்ளியின்விரிசல் சரிசெய்து கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டதாலும், கட்டுமானப்பணிகள் நடைபெறாது என உறுதியளிக்கப்பட்டதாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது நகைப்புக்குரியது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த பிப்.2 அன்று அங்கு சென்ற ஆய்வு செய்தபோதும் ஒலி மாசு இருந்துள்ளது. அப்போதும் அனுமதியின்றி கட்டுமானம் நடைபெற்று வந்துள்ளது. இது போன்றசட்டவிரோத கட்டுமானங்களுக்கு அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக அனுமதி வழங்குகின்றனர்.
சமுதாயத்தில் பண பலம், அதிகார பலம் உள்ளவர்கள் என்ன செய்தாலும் அதிகாரிகள் அதை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் சாதாரண மக்கள் வீடு கட்ட அனுமதி கோரினால் அவர்களைப் படாதபாடு படுத்தி விடுகின்றனர் என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது சிஎம்டிஏ தரப்பில், தற்போது அந்த மருத்துவமனை கட்டுமானத்துக்கு திட்ட அனுமதிவழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் திட்ட அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டுவருவது இந்த வழக்கைத் தொடர்ந்த பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்மூலம் அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யாமல் தவறி விட்டனர் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.25 லட்சம் அபராதமும், கடமை தவறிய சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சமும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதித்தனர்.
இந்த அபராதத் தொகை ரூ.37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், எம்ஜிஎம் மருத்துவமனை அடுக்குமாடி கட்டுமானம் குறித்து சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக ஒலி மாசு ஏற்படக்கூடாது என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.