Published : 24 Feb 2018 03:33 PM
Last Updated : 24 Feb 2018 03:33 PM

உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினேன்; இறந்தது போல் கிடந்ததால் விட்டுச் சென்றனர்: தப்பிப் பிழைத்த லாவண்யா உருக்கமான பேட்டி

 என் நகைகளை எடுத்துக்கொண்டு என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியும் கொள்ளையர்கள் தாக்கினர். நான் இறந்தது போல் கிடந்ததால் விட்டுச் சென்றனர் என உயிர் பிழைத்த லாவண்யா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரும்பாக்கத்தில் கடந்த பிப்.12 அன்று பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மென் பொறியாளர் லாவண்யா மூன்று பேர் கொண்ட வழிப்பறி கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார். முகம், பின்னந்தலை கைகள், மார்பில் கத்திக்குத்து என கடுமையான கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான லாவண்யா இன்றுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவரது உடலில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், லேப்டாப், ஆப்பிள் ஐபோன், அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். சாலையோரம் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த லாவண்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐசியூவில் இருந்து இரண்டு நாட்கள் கழித்தே கண்விழித்தார்.

சென்னையை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் இரண்டு நாட்களில் 3 கொள்ளையர்களை போலீஸார் பிடித்து அரிவாள் மற்றும் லாவண்யாவிடம் வழிப்பறி செய்த பொருட்களை, வாகனத்தை மீட்டனர்.

லாவண்யா கண்விழித்ததை அறிந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று அவரைப்பார்த்து நலம் விசாரித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரை சந்தித்து ஆறுவதலும், வாழ்த்தும் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை மூலம் லாவண்யா சிறிது சிறிதாக தேறி வருகிறார்.

தலையில் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கப்பட்டது, முகத்தில் இரண்டு இடங்களில் பெரிய அளவில் இரண்டு அரிவாள் வெட்டுகள், தடுக்க முயன்றதால் கையிலும் வெட்டு, மார்பில் தோளில் கத்திக்குத்து என சாவின் விளிம்புக்கே லாவண்யா சென்று வந்துள்ளார்.

தற்போது பேசும் நிலைக்கு வந்துள்ள லாவண்யா ஊடகங்களுக்கு முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். அவரது பேச்சில் துணிச்சலும், சமூக அக்கறையும் வெளிப்படுகிறது.

அவரது பேட்டி வருமாறு:

''பெரிய வாகனம் ஒன்று வந்தது, ஆட்டோ என்று நினைக்கிறேன். இருட்டான அந்த சாலையில் அவர்கள் என்னை எப்படி மடக்கினார்கள் என்பது எனக்கு ஞாபகம் இல்லை.

அவர்கள் வழிப்பறிக்குதான் வந்துள்ளார்கள் என்று எனக்கு தெரிந்தது. நான் அவர்களிடம் என்னிடம் இருக்கும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னை கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சினேன்.

ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. அவர்கள் என் கையில் இருந்த தங்க பிராஸ்லெட்டைப் பிடுங்கினர். அது டைட்டாக இருந்ததால் நான் வலியால் அலறினேன்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவன் இரும்புக் கம்பியால் என் பின்னந்தலையில் தாக்கினான். அவர்கள் மூன்று பேர் என்னைக் கடுமையாக தாக்கினார்கள். அவர்களிடம் போராடினேன். பலத்த காயமடைந்த நான் அவர்களிடமிருந்து தப்பிக்க உயிரிழந்தது போல் கீழே கிடந்தேன். நான் உயிரிழந்து விட்டதாக கருதிய அவர்கள் என்னை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.

இரண்டு மணிநேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினேன். வெகு நேரம் உதவிக்காகப் போராடினேன். யாரும் உதவிக்கு வராத நிலையில் தனி ஒரு பெண்ணாகப் போராடினேன். அந்த நேரம் என் மனதில் தோன்றியதெல்லாம் எனது பெற்றோரின் ஒரே மகளான நான் அவர்களை விட்டு போய்விடக்கூடாது என்ற மன உறுதியில் போராடினேன்.

கடைசியில் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் சாவின் எல்லைக்கே சென்றுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்தேன். பலரும் என்னைப் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

நான் முற்றிலும் குணமடைந்த பின்னர் தமிழக அரசின் உதவியுடன் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவேன்'' என்று லாவண்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x