

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வளாகத்தில் செங்கலுக்கு கருப்புக் கொடியுடன் மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர் காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது, 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால், தற்போது வரையிலும் மருத்துவமனைக்கான கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை.
இந்நிலையில், மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாணவர் காங்கிரஸ் சார்பில் மதுரை மாவட்டத் தலைவர் வினோத், செயலாளர் சுரேஷ், மாநிலப் பொதுச் செயலாளர் விஜய தீபன் என 20-க்கும் மேற்பட்டோர், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூர் வளாகப் பகுதியில் நேற்று திரண்டனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் ஒன்றுக்கு மாலை அணிவித்து, 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலியை செலுத்துவதாக கோஷமிட்டனர்.
பின்னர், மோடியே ‘திரும்பி போ’ என கருப்புக் கொடிகளை காட்டி கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற மதுரை ஆஸ்டின்பட்டி போலீஸார், மாணவர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.