Last Updated : 07 Feb, 2018 09:41 AM

 

Published : 07 Feb 2018 09:41 AM
Last Updated : 07 Feb 2018 09:41 AM

சர்வதேச பருவகால பசுமை நிதியை பெற தமிழக அரசு நடவடிக்கை: கடல் அரிப்பை தடுத்து மீன் வளத்தை பெருக்க ரூ.1,143 கோடியில் ஒருங்கிணைந்த திட்டம் - மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

தமிழக கடற்கரை பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் உருவாகும் கடல் அரிப்பை தடுத்து மீன் வளத்தைப் பெருக்க ரூ.1,143 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதற்கான நிதியை சர்வதேச பருவகால பசுமை நிதியில் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புவி வெப்பமடைவதால், பருவநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இதனால், கடற்கரை பகுதிகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றுக்கான தீர்வுக்காக, சர்வதேச அளவில் பருவகால பசுமை நிதி உருவாக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் அடிப்படையில், இந்த நிதி மத்திய அரசால் பெறப்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, 1,060 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை உள்ளது. கடலும், ஆறும் சங்கமிக்கும் முகத்துவாரங்களும் அதிக அளவில் உள்ளன. இந்த முகத்துவாரங்களில் கடல்நீர் உட்புகும்; ஆற்றுநீரும் கடலுக்குள் வரும். இதனால், அப்பகுதிகளில் கடலின் வெப்பநிலை சமன் செய்யப்பட்டுவிடும். இப்பகுதிகளில்தான் அதிகமான மீன்கள் வந்து குஞ்சு பொரிக்கும். எனவே, முகத்துவாரப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முகத்துவாரப்பகுதிகள் தூர்ந்துவிட்டால், மின் வளம் குறைவதுடன், கடல் அரிப்பும் அதிகரிக்கும். இதுதவிர புயல், கனமழை, பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் முகத்துவாரங்கள், கடற்கரை பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சமீபத்தில் கன்னியாகுமரியில் வீசிய ‘ஒக்கி’ புயல், மீனவர்களை மட்டுமின்றி கடற்கரை கிராமங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்நிலையில், முகத்துவாரங்களை தூர்வாருதல் மற்றும் கடல் அரிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்துள்ளது. இதற்கு சர்வதேச பருவகால பசுமை நிதியில் இருந்து நிதியை பெற, மத்திய அரசு மூலம் தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

பருவகால மாற்றம், கடற்பகுதிகளில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடல் அரிப்பு ஏற்படுவதுடன், கடற்கரையோரங்களில் மரங்களும் அழிந்து விடுகின்றன. பருவகால மாற்றத்தால் கடல்நீர் வெப்பநிலை உயர்வதால், மீன்வளம் பாதிக்கப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண, முகத்துவாரங்களை தூர்வாரி, நீர் எளிதாக வந்து செல்வதை உறுதி செய்வது அவசியம்.

தமிழகத்தில் 1,060 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள 54.25 கி.மீ. கடற்கரை பகுதி அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர முகத்துவாரங்களை தூர்வார வேண்டியுள்ளது.

இதற்காக கடற்கரை பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ‘தமிழக கடற்கரை மேலாண்மை, பருவகால மாற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்திட்டம், நபார்டு வங்கி மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,143 கோடியே 56 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இத்திட்டத்தால், கடல் அரிப்பை தடுக்க முடியும். கடலில் மாசுக்கள் கலப்பதை தடுப்பதுடன், மீன்வளத்தை அதிகரித்து, மீனவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இத்திட்டம் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இதில் 5 சதவீத நிதி மாநில அரசாலும், மீதமுள்ள நிதி பருவகால பசுமை நிதியில் இருந்தும் செலவழிக்கப்படும். முதலில் முகத்துவாரங்கள் தூர்வாரப்படும். அடுத்ததாக, மணல் சேரும் போதெல்லாம் அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் தாக்கிய ‘ஒக்கி’ புயலால் குமரி மாவட்ட கடற்கரை பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பருவகால பசுமை நிதி மூலம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இந்த நிதி விரைவில் தமிழகத்துக்கு கிடைக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x