

சென்னை: கருவின் வயதை கண்டறியும் புதியசெயற்கை நுண்ணறிவு மாதிரியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கர்ப்பிணிகளின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும், பிரசவதேதியை சரியாக நிர்ணயிக்கவும், கரு எப்போது உருவானது என்பதை, அதாவது கருவின் வயதை துல்லியமாக கணக்கிடுவது அவசியம். இன்றைய காலகட்டத்தில், மேற்கத்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றி கருவின் வயது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், கருவின் வளர்ச்சியில் மாறுபாடு இருக்கும் பட்சத்தில், இந்த கணக்கீடு தவறாக அமையவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், 3 மாத கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் வயதை துல்லியமாக கண்டறியும் வகையில், சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்ப துறை, ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள ‘திஸ்டி’ மருத்துவ அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உயர்நிலை ஆராய்ச்சிக்கான குழுவை அமைத்தது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், ‘கர்ப்பிணி-ஜிஏ2’ எனப்படும் இந்தியாவுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 3 மாத கருவின்வயதை கண்டறிய, இந்திய மக்கள்தொகை தரவை பயன்படுத்தி, முதன்முதலாக இந்த மதிப்பீட்டு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவ ரீதியாக இந்தியக் கருவின் வயதை துல்லியமாக மதிப்பிடுவதுடன், 3 மடங்கு பிழைகளையும் குறைக்கிறது. இந்த மாதிரியை பயன்படுத்தி மகப்பேறு மருத்துவர்கள், சிசு பராமரிப்பியல் மருத்துவர்கள் குழந்தை பராமரிப்பை மேம்படுத்த முடியும். தாய் - சேய் உயிரிழப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.
இந்த ஆராய்ச்சிக்கு மத்திய உயிரி தொழில்நுட்ப துறை செயலர் ராஜேஷ் கோகலே வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர்கூறும்போது, ‘‘இது உயிரி தொழில்நுட்ப துறையின் முதன்மையான திட்டம். கருவின் வயதை மதிப்பிடுவதற்கான மக்கள்தொகை சார்ந்த மாதிரிகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது’’ என்றார்.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து ஐஐடி உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஹிமான்சு சின்ஹா கூறியபோது, ‘‘இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்தி, மேற்கத்திய மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மாதிரிகளுக்கு பதிலாக துல்லியமாக இந்தியக் கருவின் வயதை கணிக்கும் கருவிகளை உருவாக்க முயன்று வருகிறோம். அதற்கான மாதிரிகளை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் முதல்படி’’ என்றார்.