

சென்னை: காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரம் இயற்கையாக கிடைக்கிறது. ஆனால், இந்த இருவகை மின்சாரமும் நாள் முழுவதும் ஒரே சீராக கிடைப்பதில்லை.
அதனால், மின்தேவையைப் பூர்த்தி செய்ய வசதியாக, அடுத்த நாள் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்தவர்கள் முந்தைய நாளே மின்வாரியத்தின் துணை நிறுவனமான மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில், அதிகமாக வழங்குவதாக தெரிவித்து விட்டு குறைவாக வழங்கினால், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கவேண்டிய நிலை மின்வாரியத்துக்கு ஏற்படும். அவ்வாறு வாங்கும்போது செலவும் அதிகரிக்கிறது. அத்துடன், மின்வழித் தடங்களிலும் பாதிப்பும் ஏற்படும்.
எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவைவிட 15% வரை வித்தியாசம் இருக்கலாம். அதற்கு மேல் குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சார அளவு இருந்தால் யூனிட்டுக்கு அதிகபட்சம் 3 காசு வீதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.