

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையம் 200 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், தலைமை தேர்தல் ஆணையர் வருகை, அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொதுவாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் திருப்தி தெரிவித்தார். சில மாவட்டங்களில் சில விஷயங்கள் குறித்து கவனம் மேற்கொள்ள அறிவுறுத்தினார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொதுவான பல பரிந்துரைகளை வழங்கின. குறிப்பாக ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் வைக்க வேண்டும். ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ண வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் தமிழகத்துக்கு 200 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்புவதாக கூறியுள்ளது. கடந்த தேர்தலில் 160 கம்பெனி படைகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் ஒரு குறிப்பிட்ட கம்பெனி படையினர் அனுப்புவார்கள். அந்த படையினர் பதட்டமான பகுதியில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போதும் பிரச்சினை ஏற்படலாம் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்து படையினர் அனுப்பப்படுவார்கள். தேர்தல் முடிந்த பின்பும் சில நேரங்களில் எண்ணிக்கையின் போதும் அதிகளவில் படையினர் நிறுத்தப்படுவார்கள்.
தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து மாவட்ட வாரியாக கடந்த ஆண்டுகளில் எந்தமாதிரியான வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை ஆய்வின்போது கேட்டு பெற்றனர். பிடிவாரண்ட், குண்டர் சட்டம் தொடர்பான தகவல்களையும் கேட்டனர். அதன்பின், வாக்குச்சாவடி வாரியாக நிலைமை ஆய்வு செய்யப்பட்டு அதன்பின், முடிவெடுக்கப்படும்.
வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பார்வையாளர்கள் முழுமையாக ஆய்வு செய்து, தேவைப்படின் கூடுதல் இடங்களை பதட்டமான பகுதிகள் பட்டியலில் சேர்ப்பார்கள். வருமானவரித் துறை உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப் பிரிவினர் தகவல் பறிமாற ‘இ- எஸ்எம்எஸ்’ என்ற குறுஞ்செய்தி வசதியை மேம்படுத்தி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில் வங்கி, அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் எந்த துறை எந்த தகவல் பதிவிட்டாலும், அனைவருக்கும் பகிரப்படும். தகவல்கள் விரைவாக கிடைக்கும். அதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவிஜில் என்பது பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதியாகும். வெப்காஸ்டிங் அதிகளவில் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கேட்பதால், தொடர் வீடியோ பதிவு வசதியும் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 25 படைகள் வருகை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தல் தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதில் 15 கம்பெனி படையினர் வரும் மார்ச் 1-ம் தேதியும், 10 கம்பெனி படையினர் மார்ச் 7-ம் தேதியும் தமிழகத்துக்கு வரவுள்ளனர். இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.