Published : 27 Feb 2024 05:35 AM
Last Updated : 27 Feb 2024 05:35 AM
சென்னை: கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சொந்த கிடங்கு வசதி இல்லாத சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான கிடங்குகளை பயன்படுத்தி, தானியங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
மேலும், உடனடி நிதி தேவைக்காக, தானியங்களுக்கு ஈடாக தானிய ஈட்டுக் கடன் பெறும் நடைமுறையும் உள்ளது. தானியங்களின் சந்தை மதிப்பில், 75 சதவீதம் வரையிலான மதிப்பில் 10 முதல் 11.75 சதவீத வட்டியில் கடன் பெறலாம். இத்தொகையை ஓராண்டு தவணையில், ஒரே நேரத்திலோ, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்தலாம்.
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு 5,47,800 டன் கொள்ளளவு கொண்ட 4,047 கிடங்குகள் உள்ளன. இதில், 1,164 கிடங்குகள் ஏற்கெனவே கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24-ம் ஆண்டில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை ரூ.202.98 கோடி அளவுக்கு 4791 விவசாயிகள் தானிய ஈட்டுக் கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடன் உச்சவரம்பை உயர்த்த கோரிக்கை வந்தது. இதை ஏற்று, கடன் குறியீட்டினை எய்த ஏதுவாகவும், பயனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையிலும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், மணிலா, மஞ்சள், சாமை, தினை உள்ளிட்ட தானியங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக்கடன் பெறலாம். அதிக விலை கிடைக்கும்போது, தானியங்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT