Published : 27 Feb 2024 04:00 AM
Last Updated : 27 Feb 2024 04:00 AM

“38 எம்.பி.-க்களை வைத்து திமுக என்ன செய்தது?” - எஸ்.பி.வேலுமணி கேள்வி

எஸ்.பி.வேலுமணி

திருப்பூர்: திருப்பூர் மாநகர், மாவட்ட வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்ட விழா அங்கேரிபாளையம் சாலையில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல அதிமுக பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு பிறகு பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டன. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, அதிமுகவின் திட்டங்களை திறந்துவைத்து வருகிறது. ‘நீட்’ தேர்வை ஒழிப்பதாக கையெழுத்து பெற்று, திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.

முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்ததால்தான், இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கடந்த முறை 38 எம்.பி.-க்களை வைத்து மக்களவையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அதிமுக ஆட்சியில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், காவிரி நதிநீர் பிரச்சினைக்காக 25 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகளாகியும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், எந்த திட்டத்தையும் செயல் படுத்தாமலும் இருக்கும் திமுகவை புறக்கணித்து, வரும் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.என்.விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x