Published : 27 Feb 2024 05:19 AM
Last Updated : 27 Feb 2024 05:19 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம், மறைமலை நகர், செட்டிபுண்ணியம் ஆகிய மூன்று பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ. ரூ.97.4 கோடியில் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.
மறைமலை நகர், செட்டிப்புண்ணியம் ஆகிய பகுதியில், ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள, ரயில் பாதை வழியாக, சென்னையிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள், தென்மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்கள் செல்லும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல் சோத்துப்பாக்கம் செய்யூர் சாலையில் சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால் மேல்மருவத்துார், செய்யூர், கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில், இந்த இடங்களை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், கேட் திறக்கப்படும்போது முந்திக்கொண்டு செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, மேம்பாலம் கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் சோத்துப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்கள் மற்றும் 1,500 ரயில்வே மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், ரூ. 34.09 கோடி, செட்டிப்புண்ணியத்தில் ரூ.31.44 கோடி சோத்துப்பாக்கத்தில் ரூ.31.87 கோடி என, மொத்தம் ரூ.97.4 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் இப்பணியை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT