Published : 27 Feb 2024 05:54 AM
Last Updated : 27 Feb 2024 05:54 AM

புதியதாகக் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம்; 2 - வது பெரிய கடற்கரையில் அமைந்திருக்கும் முதல் அதிசயம்: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் அமைந்திருக்கும் முதல் அதிசயம் கருணாநிதி நினைவிடம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புதியதாக கட்டப்பட்ட நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக உரையாற்றியதாவது:

‘இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா, நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை, உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா’ என்று அண்ணா மறைந்தபோது கருணாநிதி எழுதிய கவிதை உயில் இது. அவருக்கு வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் அவரது உயிரனைய அண்ணனுக்குப் பக்கத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக குடும்பங்களின் தலைப்பிள்ளைகள்: அண்ணாவின் நினைவிடம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடம் புது உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அண்ணனும் தம்பியும்தானே தமிழக குடும்பங்களின் தலைப்பிள்ளைகள்.

இன்று நாம் பார்க்கும் தமிழகத்தை உருவாக்கியவர்கள். நம்மையெல்லாம் இன்றும் என்றும் இயக்கும் தலைவர் கருணாநிதிக்கு இதோ உங்களுக்கு சென்னைக் கடலின்கரையில் கண்ணைக் கவரும் கம்பீர நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பதினான்கு வயதில் தமிழ்க் கொடி ஏந்தி அதை 95 வயது வரை விடாமல் பிடித்திருந்த கனத்த கரங்களுக்குச் சொந்தக்காரரான கருணாநிதியின் முழு வாழ்க்கையையும் இந்த நினைவிடத்தைச் சுற்றிப் பார்க்கும்போது மொத்தமாய் தெரிந்து கொள்ளலாம்.

தனது வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்று ஆறு பாகங்கள் மட்டும் எழுதினார் கருணாநிதி. இயற்கை இடமளித்தால் ஏழாவது பாகத்தையும் எழுதுவேன் என்று ஊக்கமாகவும் இருந்தார்.

காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றது. வரலாற்றைப் படைக்கும் வல்லமையை அவர் நமக்கு வழங்கிச் சென்றதால் அடுத்தடுத்த பாகங்களில் கருணாநிதி இருந்து எழுதி இருந்தால் என்னவெல்லாம் எழுதி இருப்பாரோ, அவை அனைத்தையும் காட்சிக்கு கொண்டு வந்து நிறுத்தும் வகையில் கண்காட்சியாக வைத்துள்ளோம்.

அழியாத காவியங்கள்: அவரது பேனா தீட்டிய கதைகள் - கவிதைகள் - புதினங்கள் - நாடகங்கள் - திரைக்கதை உரையாடல்கள்என்பவை எல்லாம் தமிழ் இருக்கும் காலமெல்லாம் இருக்கும் அழியாதகாவியங்கள். எந்த ஆழிப்பேரலையாலும் அழிக்க முடியாது.

ஐந்து முறை முதல்வராக இருந்து அவர் போட்ட கையெழுத்தின் காரணமாகத்தான் தமிழகத்தின் முன்னெழுத்தாக ‘மு.க.' என்ற இரண்டெழுத்து உருவானது. திருவாரூரில் புறப்பட்ட அவர், தமிழ கத்தையே திருவூராக ஆக்கினார். தமிழகமே ஆரூரார் உருவாக்கிய நாடாகக் காட்சி அளிக்கிறது.

கருணாநிதி போகாத ஊரில்லை. பேசாத நகரில்லை. தமிழ்மண் பயனுற வாழ்ந்த கலைஞரை எல்லாத் திட்டங்களும் நினைவூட்டியபடியே, அவர் நினைவைப் போற்றும் சின்னங்களாக வானுயர அமைந்து வாழ்த்துகின்றன. தமிழக பெருந்தலைவர் களுக்கு எல்லாம் நினைவு மண்டபங்கள் எழுப்பிய கருணாநிதிக்கு, ஆறடி மண் கேட்டுப் போராட வேண்டியதாக இருந்தது. கருணாநிதி என்றால் போராட்டம்.இதுதானே அவரது வாழ்வும் வரலாறும் நானிலத்துக்குச் சொல்கிறது.

வெற்றி என்பதன் அடையாளம்: போராட்டம் மட்டுமல்ல, கருணாநிதிஎன்றால் வெற்றி என்பதன் அடையாளம் இந்த நினைவிடம். பொதுப் பணித் துறை அமைச்சரும், எதிலும்வல்லவர் என்று தலைவரால் போற்றப்பட்டவருமான எ.வ.வேலுவின் அர்ப்பணிப்பு உணர்வால் மிகச்சீரிய முறையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள ‘கலைஞரின் உலகம்’ என்ற இந்த நினைவிடம் இரண்டாவது பெரிய கடற்கரையில் அமைந்திருக்கும் முதல் அதிசயம்.

கருணாநிதி எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம். தமிழகம் சுற்றுகிறது. கருணாநிதி உலகு ஆள்வார். உலகம் கருணாநிதி பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும். கருணாநிதி நினைவிடத்துக்குள் வாருங்கள். கருணாநிதி வாழ்ந்த வாழ்க்கையைக் காணலாம். கருணாநிதியோடு வாழலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x